கபசுர குடிநீர் தயார் செய்வது எப்படி? யாரெல்லாம் இதை குடிக்கக்கூடாது?

15 May 2021, 12:01 pm
how the kabasura kudineer is made
Quick Share

கொரோனா தொற்று தீவிரமடைவதை அடுத்து, மக்கள் தங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை  எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து கபசுர குடிநீரும் பிரபலம் அடைந்துள்ளது. சரி கபசுர குடிநீர் எப்படி தயார் செய்யப்படுகிறது?

தேவையான மூலிகை பொருட்கள்:

 • சுக்கு, 
 • திப்பிலி, 
 • முள்ளிவேர், 
 • லவங்கம், 
 • அக்கரகாரம், 
 • சிறுகாஞ்செறி வேர், 
 • கடுக்காய்த் தோல், 
 • ஆடாதொடா இலை, 
 • கற்பூரவள்ளி இலை, 
 • கோஷ்டம், 
 • சீந்தில் கோடி, 
 • சிறு தேக்கு, 
 • நிலவேம்பு சமூலம், 
 • வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு) 
 • முத்தக்காசு (கோரைக்கிழங்கு)

ஆகிய 15 மூலிகைகளிலும் தலா 35 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து, இடித்து நன்கு கலந்துக்கொள்ளுங்கள்.

இந்த 35 மூலிகைகள் கலந்த சூரணத்தை 3 லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடிநீர் 250 மிலி ஆக குறையும் அளவுக்கு காய்ச்சிக் கொள்ளுங்கள். 30 முதல் 60 மிலி வீதம், தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் கபசுர பிரச்சினைகள் தீரும். 

சூரணம் வாங்கி வீட்டில் தயார் செய்பவர்களுக்கு:

இரண்டு தேக்கரண்டி (10 கிராம்) நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணத்தை எடுத்து 200 மிலி அளவு தண்ணீருடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காகும் வரை காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.  1 முதல் 5 வயது வரை உள்ள சிறுவயதினர் 5 மி.லி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி அளவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மி.லி. அளவும் இந்த மூலிகை குடிநீரைக் குடிக்கலாம்.

முதலில் 3 முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை மட்டும் இந்த மூலிகை குடிநீரைக் குடிக்கலாம். நோய் தொடங்கிய பின் மருத்துவர் அறிவுரையைப் பொறுத்து பயன்படுத்த வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. ஏதேனும் நோய் இருந்தால், மருத்துவர் அறிவுரையின்படி உணவுக்கு முன் அல்லது பின் எடுத்துக்கொள்ளலாம்.

எப்படி பயன்படுத்தக்கூடாது? யார் குடிக்கக்கூடாது?

கபசுர குடிநீரை புதிதாக காயவைத்து அப்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3 மணி நேரத்திற்குப் பிறகு கபசுர குடிநீரைப் பயன்படுத்தவே கூடாது. 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே குடிக்க வேண்டும்.

Views: - 853

2

0