ப்ளாஸ்மா சிகிச்சை மூலம் 5 பேர் குணமடைந்துள்ளனர்… மதுரை அரசு மருத்துவமனை டீன் பேட்டி….

30 July 2020, 8:29 pm
Quick Share

மதுரை: சனிக்கிழமை முதல் குறுஞ்செய்தி மூலமாக கொரோனா முடிவுகள் குறித்த சான்றிதழை டவுண்லோட் செய்யலாம் என்றும், சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிக பரிசோதனை நடத்தப்படுகிறது, ப்ளாஸ்மா சிகிச்சை மூலம் 5பேர் குணமடைந்துள்ளதாகவும் மதுரை அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 1,39,311பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி மட்டும் 4,800 பரிசோதனைகள் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளோம். அரசு கொரோனா மருத்துவமனையில் 6பிசிஆர் கருவிகளும், 770 ஆக்சிசன் கூடிய படுக்கைகள் உள்ளது. வரும் சனிக்கிழமை முதல் குறுஞ்செய்தி மூலமாக கொரோனா முடிவுகள் குறித்த சான்றிதழை டவுண்லோட் செய்துகொள்ளலாம். 6 பேரிடம் ப்ளாஸ்மா வாங்கி 5 பேருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை வழங்கி முழுமையாக குணமடைந்துள்ளனர். ப்ளாஸ்மா வங்கி வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனா நோயாளிகளுடன் இருக்கும் உதவியாளர்களை தனிக்குழு அமைத்துள்ளோம். நோயாளிகளின் உதவியாளர்கள் வெளியில் செல்ல கூடாது.

தொற்று நோய் சிகிச்சைகளில் 30 வருடம் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆரம்பநிலை நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை வழங்கி வருகிறோம். மனசாட்சிக்கு விரோதமின்றி பாரபட்சமின்றி கொரோனாவிற்கு எதிராக போராடி நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றி வருகிறோம். உயிரிழந்தவர்களை கடவுளுக்கு சமமானவர்களாக மதித்து உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதிக அளவிற்கான செவிலியர்களை பணி நியமனம் செய்துள்ளோம். கொரோனா நோயாளிகளுக்கு ருசியான உணவுகள் பாரபட்சமின்றி உணவுகள் வழங்கப்படுகிறது. கொரோனா மருத்துவமனையில் கூடுதலாக 50பணியாளர்கள் நியமித்துள்ளோம்.

நோயாளிகளை காப்பாற்ற கண்ணுக்கு தெரியாத கிருமிகளுடன் மருத்துவர்கள் நாங்கள் உயிரை கொடுத்து போரோடி வருகிறோம். பாரபட்சமின்றி செவிலியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்கிறோம் இதனை கண்காணிக்க மருத்துவர் குழுவை நியமித்துள்ளோம், கொரோனா வார்டில் பணிபுரிந்த 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர் சாந்திலால் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 300சதவித சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் வெளியிட்ட ஆடியோ கொரோனாவிற்கு எதிராக போராடிவரும் மருத்துவர்களை வேதனை அடைய செய்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.