விரைவில் ஒரு கட்டமாகவே அரசு கல்லூரிகளில் வகுப்புகள் செயல்படும்… அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…

23 May 2020, 9:26 pm
Dharmapuri Minister - Updatenews360
Quick Share

தருமபுரி: தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் வகுப்புகள், விரைவில் ஒரு கட்டமாகவே வகுப்புகள் செயல்படுத்த தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் இன்று 124 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 59 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு கடன் உதவியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக் கழகத்தில் தற்போது உள்ள துணைவேந்தரின் பதவிக்காலம் வரும் 27ம் தேதியுடன் நிறைவடைவதாக புதிய துணைவேந்தரை நியமிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வரும் 31ம் தேதி வரை துணைவேந்தர் விண்ணப்பங்களை பெறுவார்கள்.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு, பெயர் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தமிழக ஆளுநர் சென்னை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்து அறிவிப்பார். மேலும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவை படிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவித்துள்ளது. இதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும், வகுப்பறை பற்றாக்குறை காரணமாக ஒருநாளைக்கு இரண்டு கட்டங்களாக வகுப்புகள் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதை தொடர்ந்து, இதற்காக 150 கோடி ரூபாய் தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் 715 புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது அரசு கல்லூரிகளில் போதுமான அளவு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் தேவையான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அரசு கல்லூரிகள் ஒரு நாளைக்கு ஒரு கட்டமாகவே வகுப்புகள் செயல்பட தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.